×

ஓபிஎஸ், இபிஎஸ் அணி இணையாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி நிச்சயம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி

நாமக்கல்: ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் ஒன்றிணையாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுகவுக்கு தோல்வி நிச்சயம் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார். நாமக்கல்லில் அதிமுக ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ, பிரபாகரன், புகழேந்தி, அழகுராஜ், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்திற்கு பின்னர் வைத்திலிங்கம் அளித்த பேட்டி:
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இயக்கம் இப்போது இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இரண்டு அணிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இணையாவிட்டால், 40 இடங்களிலும் அதிமுக தோல்வியடையும். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்கள் அணிக்கே சாதகமாக வரும். ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என தேர்தல் ஆணையம் கூறவில்லை. இதனால் தான் அதிமுக கொடியை பயன்படுத்தி வருகிறோம். இதற்கு சில இடங்களில் வரும் எதிர்ப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

தற்போது, எடப்பாடி அணியில் இருப்பவர்களும் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். கட்சியை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி ஒத்து வந்தால், அது ஜெயலலிதாவிற்கு செய்யும் நன்றிக்கடன். இல்லாவிட்டால், அவரை ஒதுக்கிவிட்டு அதிமுகவை ஒன்று சேர்ப்போம். அரசியல் அனாதை என முன்னாள் அமைச்சர் காமராஜ் என்னை பற்றி கூறியுள்ளார். அதை சொல்ல அவருக்கு தகுதி இல்லை. அவர் குடும்பத்துடன் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து பதவி வாங்கியவர். நாங்கள் பதவிக்காக யார் காலிலும் விழமாட்டோம். சேலத்தில் விரைவில் மாநாடு நடத்தப்படுகிறது. அதற்காக, மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு வைத்தியலிங்கம் தெரிவித்தார்.

The post ஓபிஎஸ், இபிஎஸ் அணி இணையாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி நிச்சயம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : OPS ,EPS ,minister ,Vidilingam ,Namakkal ,Former ,Vilidingam ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...